நம் முன்னோர்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் என்னவென்றால், அக்காலத்தில் எல்லாம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும், அது வீட்டு வேலையானாலும் சரி அல்லது மற்ற வேலையானாலும் சரி யோகாசனங்களுக்கு இணையாக இருந்தது. அதனால் அவர்கள் யோகாசனம் செய்து தான் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் இருந்தது.
ஆனால் தற்போதோ அனைத்து வீட்டு வேலைகளுக்கும் இயந்திரம் வந்துவிட்டதால், உடல் நோகாமல் வீட்டு வேலைகளை செய்கிறோம். அத்துடன் நல்ல கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்கிறோம். இதனால் உடல் பருமன் அதிகரித்துவிடுகிறது. பின் தொப்பை வந்துவிட்டது என்று அதனை குறைக்க பல முயற்சிகளை மேற்கொள்வோம்.
அப்படி நீங்கள் உங்கள் தொப்பையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், தினமும் யோகா செய்யுங்கள். இதனால் தொப்பை குறைவதுடன், மனம் ரிலாக்ஸ் ஆகும். அதிலும் இன்று உலக யோகா தினம் என்பதால், தற்போது அனைவரும் அவஸ்தைப்பட்டிருக்கும் தொப்பையை குறைப்பதற்கான சில யோகாக்களைப் பார்ப்போம்.
தடாசனம் நேராக நின்று, கைகளை மேலே தூக்கி, விரல்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்தவாறு, உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்க வேண்டும். பின் குதிகால்களை மேலே உயர்த்தி, முடிந்த வரையில் உடலையும் மேலே உயர்த்தி 5 நிமிடம் இருந்துவிட்டு, பின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுப்போன்று மூன்று முறை செய்ய வேண்டும்.



பவனமுத்தாசனம் நேராக படுத்து, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, உள்ளங்களால் தரையை தொடும் படி கால்களை மடித்து, பின் கால்களின் முட்டி தாடையை தொடும் படி கால்களை மடித்தவாறு உயர்த்தி, கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று 7-10 முறை 15 நொடிகளுக்கு இடைவெளி விட்டு செய்து வர வேண்டும்.
தனுராசனம் முதலில் குப்புறப் படுக்கவும். அப்போது கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். கைகளால் கணுக்கால்களை பிடிக்கவும். மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தலையையும் உடலையும் தூக்கவும். வில் போல் வளைக்கவும். அடிவயிறு மட்டும் தரையை தொட்டுக் கொண்டிருக்கவும். இந்த நிலையில் சாதாரணமாக மூச்சு விட்டு கொண்டு சில நொடிகள் இருக்கவும். மூச்சை வெளிவிட்டு நிதானமாக சாதாரண நிலைக்கு திரும்பவும். இந்த பயிற்சியை 3-5 முறை திரும்பச் செய்யவும்.
புஜங்காசனம் இந்த ஆசமானது நல்ல பாம்பு படம் எடுப்பது போல் காணப்படும். அதற்கு முதலில் குப்புறப் படுத்து, கைகளை மார்புக்கு அருகில் பக்கவாட்டில் வைத்து, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு, உடலை மெதுவாக தூக்க வேண்டும். முக்கியமாக தொப்புள் தரையில் படாதவாறு உடலை நன்கு வளைத்து தூக்க வேண்டும். இந்நிலையில் 30 நொடிகள் இருந்து, பின் சாதாரண நிலைக்கு வர வேண்டும்.
உஷ்ட்ராசனம் இந்த ஆசனம் செய்யும் போது, படத்தில் காட்டியவாறு முதலில் மண்டியிட்டு கால்களை சிறிது விரித்து வைத்து, பின்னோக்கி வளைந்து, கைகளால் கால்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.